fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » நியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர் (VIDEO, PHOTOS)
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

நியமனம் இடைநிறுத்தப்பட்ட வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் யாழில் நான்காவது நாளாகவும் போராட்டம்: கண்டுகொள்ளாத ஆளுநர் (VIDEO, PHOTOS)

நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் இன்று வியாழக்கிழமை(04) நான்காவது நாளாகவும் யாழில் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இரவு- பகலாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட பெண் சுகாதாரத் தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேற்படி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

05.9. 2019 சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வைத்து வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்தமையால் நியமனம் வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது. இதன்பின்னர் 28.11. 2019 ஆம் திகதி நியமனக் கடிதம் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நாங்கள் கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற போது நியமனம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நாம் எமக்கான நியமனத்தை மீளவும் பெறுவதற்குப் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும் இதுவரை எமக்குப் பலனளிக்கவில்லை. நாங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக அலுவலகத்துக்கு இதுசம்பந்தமாகப் பல தடவைகள் சென்று கதைத்த போது கொழும்பிலிருந்து அனுமதி வந்தால் தான் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறுவார்கள். யாழ் . மாவட்டச் செயலகத்தில் சென்று கதைக்கும் போதெல்லாம் வடமாகாண ஆளுநர் அம்மா தான் உங்களுக்கு அனுமதி எடுத்துத் தர வேண்டும் எனக் கூறுவார்கள்.

நாங்கள் இதுதொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் சென்று கதைத்த போது வடக்கு மாகாண ஆளுநர் இதுதொடர்பான கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். இதன்பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இதன்பின்னர் மீண்டும் நாங்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று சுகாதார அமைச்சரைச் சந்தித்த போது 454 பேருக்கான நியமனத்தையும் வழங்கச் சொல்லி நான் கடிதம் அனுப்பி விட்டேன். நீங்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் சென்று கேளுங்கள் எனக் கூறினார்.

இந்தவிடயம் தொடர்பில் நாங்கள் பல தடவைகள் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்கச் சென்ற போதும் ஆளுநர் எங்களைச் சந்திப்பதை தொடர்ச்சியாக உதாசீனம் செய்து வருகிறார். இந்நிலையில் ஆளுநரின் செயலாளரைச் சென்று சந்திக்குமாறு ஆளுநர் அலுவலகத்தில் நிற்பவர்கள் கூறினார்கள். இதற்கமைய நாங்கள் அவரைச் சென்று சந்தித்த போது அம்மா … உங்களைச் சந்திக்க விருப்பமில்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கிறா. அம்மா ஓகே என்றால் நீங்கள் சென்று சந்தியுங்கள் எனக் கூறினார் . ஆனால், இதுவரை அம்மா எங்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறா.

நாங்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். ஆளுநர் தினமும் தனது வாகனத்திற்குள் இருந்தவாறு போராடும் எங்களைப் பார்த்துக் கொண்டு மாத்திரம் போறா. நாங்களும் மனிதர்கள் என்பதை மறந்து ஆளுநர் செயற்படுவது வேதனையாகவுள்ளது.

இதேவேளை, உறுதியான தீர்வு வழங்கப்படும் வரை எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

(செய்தித்தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்- எஸ். ரவி)

Related posts

டக்ளஸ் தேவானந்தாவையே நம்பியிருக்கிறோம்: யாழ். மல்லாகம் முகாம் மக்கள் கருத்து (Video, Photos)

TamilTwin

நாயுடன் சேர்ந்து 2000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை (Video)

World News

யாழிற்கு இந்தியாவிலிருந்து வருவோர் குறித்து அவதானம்: சுகாதாரப் பணிப்பாளர் எச்சரிக்கை!!

World News