Tuesday, August 16, 2022
HomeEvents-நிகழ்வுகள்நெருக்கடிகளை எதிர்கொள்ள மக்களே ஒன்றிணைவீர்: புத்தூரில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுக்...

நெருக்கடிகளை எதிர்கொள்ள மக்களே ஒன்றிணைவீர்: புத்தூரில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுக் கூட்டம்(Photos)

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி 44 ஆவது ஆண்டில் காலடி வைப்பதை முன்னிட்டுப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்தியக் குழுவின் ஏற்பாட்டில் பொதுக் கூட்டம் “நெருக்கடிகளை எதிர்கொள்ள உழைக்கும் மக்களே ஒன்றிணைவீர்” எனும் தொனிப் பொருளிலும், ‘மக்களை வாட்டி வதைத்துவரும் கோட்டா- ரணில் ஆட்சியே வீட்டுக்குப் போ’ எனும் பிரதான கோஷத்துடனும் இன்று ஞாயிற்றுக்கிழமை (03.07.2022) மாலை-5.30 மணி முதல் யாழ்.புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்தில் கட்சியின் வட பிராந்தியச் செயலாளரும், வலி.கிழக்குப் பிரதேச சபையின் சுயேட்சைக் குழுவின் தலைவருமான கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த பொதுவுடைமை வாதியுமான சி.கா.செந்திவேல், கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், மூத்த சட்டத்தரணியுமான சோ.தேவராஜா மற்றும் எழுத்தாளரும், தாயகம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான க.தணிகாசலம், கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் என்.பிரதீபன் மற்றும் பொ.முருகேசு, க.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரைகளை நிகழ்த்தினர்.

குறித்த புரட்சிகரப் பொதுக் கூட்டத்தில் தற்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான காரணங்கள், நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள், தற்போதைய நிலையில் பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களின் முக்கியத்துவம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வளர்ச்சிப் போக்கு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவரும் கருத்துக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி உருவாகி 44 ஆவது ஆண்டு பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் பெருவிழாவாக கொண்டாட வேண்டிய இன்றைய நிகழ்வை தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு கட்சியின் வடபிராந்தியக் குழு தற்போதைய நெருக்கடி சூழலை ஆராயும் ஒரு பொதுக் கூட்ட நிகழ்வாக மாற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular