Saturday, June 25, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நல்லூர் பிரதேச சபையில் நிறைவேறிய முன்மாதிரித் தீர்மானம்!(Photos)

நல்லூர் பிரதேச சபையில் நிறைவேறிய முன்மாதிரித் தீர்மானம்!(Photos)

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்திற் கொண்டு நிதிப் பற்றாக்குறை காரணமாக உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கொடுப்பனவு இன்றி சட்டபூர்வமாக மக்களுக்குச் சேவை செய்வது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (21.6.2022) முற்பகல்-9.30 மணி முதல் சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தவிசாளர் மேற்படி கோரிக்கைப் பிரேரணையை முன்வைத்தார்.

குறித்த கோரிக்கைப் பிரேரணை தொடர்பில் சபையில் காரசாரமான விவாதங்கள் நடாத்தப்பட்ட நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினரும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டார்.

இதேவேளை, கொடுப்பனவு இன்றிப் பணியாற்றத் தயார் எனவும், எனினும், அந்த நிதியை அரசாங்கத்திற்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லை எனவும், குறித்த நிதி நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மக்களுக்காகச் செலவழிக்கப்படுமாயின் அல்லது வடக்கு மக்களுக்குப் பயன்படுமாயின் அதற்கு இணங்குவதாகவும் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பெண் உறுப்பினர் திருமதி.வாசுகி சுதாகரன் சபையில் பகிரங்கமாக கருத்து வெளியிட்டார்.

யாழ்.மாநகரசபையிலும் அண்மையில் இதுதொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular