Friday, February 3, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பிப்பதற்கான விசேட கூட்டம் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தலைமையில் இன்று புதன்கிழமை(30.11.2022) முற்பகல்-10 மணி முதல் மேற்படி சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

தவிசாளர் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் உரையாற்றச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது வீதிப் புனரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சபை உறுப்பினர்களால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சபையில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சபையின் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதன்போது 20 உறுப்பினர்களைக் கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 15 உறுப்பினர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் சபை அமர்விற்கு வருகை தரவில்லை.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் 04 உறுப்பினர்கள், தவிசாளர் உள்ளிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 03 உறுப்பினர்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்கள், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 02 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினர், ஐக்கியதேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆகியோர் நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular