Friday, February 3, 2023
Homeஆன்மிகம்கதிர்காமக் கந்தனை நாடி தரிசன யாத்திரை நல்லூரில் ஆன்மீக எழுச்சியுடன் ஆரம்பம்(Photos)

கதிர்காமக் கந்தனை நாடி தரிசன யாத்திரை நல்லூரில் ஆன்மீக எழுச்சியுடன் ஆரம்பம்(Photos)

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப் பெற்ற ஈழத்தின் புகழ்பெற்ற முருகப் பெருமானின் திருத்தலமான கதிர்காமக் கந்தனின் ஜப்பசி மாத திருக்கார்த்திகையினை முன்னிட்டு இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி இலங்கை முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையினரின் ஏற்பாட்டில் புனித திருத்தல தரிசன யாத்திரை இன்று சனிக்கிழமை(05.11.2022) காலை-8.15 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆன்மீக எழுச்சியுடன் ஆரம்பமானது.

இன்று காலை-7 மணியளவில் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து விசேட பஜனை வழிபாடுகளும் இடம்பெற்றது.

தொடர்ந்து தரிசன யாத்திரையில் கலந்து கொண்ட அடியவர்கள் பஜனைப் பாடல்கள் பாடியவாறு நல்லூர்க் கந்தன் ஆலயத் தேர்முட்டியை வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து நல்லூரான் ஆலய முன்றலில் கற்பூரம் கொளுத்தப்பட்டுத் தேங்காய் உடைக்கப்பட்டு அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, சைவசமயத்தின் அடையாளமான நந்திக் கொடிகளை அடியவர்கள் தங்கள் கைகளில் ஏந்தியவாறு தரிசன யாத்திரை இனிதே ஆரம்பமானது.

மேற்படி தரிசன யாத்திரை ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வழங்கித் தரிசன யாத்திரையை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் அவர் ஆசி உரையும் ஆற்றினார்.

மூன்று தினங்களைக் கொண்டதாக இடம்பெறும் மேற்படி தரிசன யாத்திரையில் இலங்கை முதல் உதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபையினருடன் யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த தரிசன யாத்திரை பிரதான வீதி வழியாக அமைந்துள்ள ஆலயங்களைத் தரிசித்த வண்ணம் கைதடிப் பிள்ளையார் ஆலயம், முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம், தொடர்ந்து வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்மன் ஆலயம், தொடர்ந்து திருகோணமலை தென்கயிலை ஆதீனம், கன்னியாச் சிவன் ஆலயம், திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயம், திருக்கோணேஸ்வரம் சிவன் ஆலயம் தொடர்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இரவு வேளை தங்கி தொடர்ந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம் உட்படப் பல ஆலய தரிசனங்களுடன் கதிர்காமக் கந்தன் ஆலயம் சென்று அங்கு பூசை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் அடியார்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றி மீண்டும் யாழ்ப்பாணம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular