வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(02.8.2022) கொடியேற்றத்துடன் பக்திபூர்வமாக ஆரம்பமானது.
கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேற்பெருமானுக்கு இன்று காலை விசேட அபிஷேக பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் வேற்பெருமான், வள்ளி- தெய்வயானை நாயகியர், விநாயகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களுக்கும் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

முத்தெய்வங்களும் கொடித் தம்பத்தடியை வந்தடைந்ததைத் தொடர்ந்து அந்தண சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, தவில், நாதஸ்வர வாத்தியங்கள், அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, காண்டாமணி ஓசைகள் இனிதாய் ஒலிக்க முற்பகல்-10 மணியளவில் அலங்காரக் கந்தன் நல்லைக் கந்தன் கொடியேறி அருள்பாலித்தான்.
தம்ப பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து முத்தெய்வங்களும் உள்வீதியில் வீதியுலா வந்தனர்.

யாழ். குடாநாட்டு மக்கள் மாத்திரமன்றி வெளிமாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேச மக்களால் பெருவிழாவாக சிறப்பித்துக் கொண்டாடப்படும் நல்லைக் கந்தன் பெருவிழா கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாத் தொற்றுக் காரணமாகப் பெருமளவில் களைகட்டவில்லை. இந்நிலையில் இந்த வருடம் நல்லைக் கந்தன் மஹோற்சவப் பெருந் திருவிழாவின் கொடியேற்ற உற்சவத்தில் பொருளாதார நெருக்கடியால் உருவாகியிருக்கும் பல்வேறு பாதிப்புக்களுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.
எனினும், மீண்டும் உருவாகியிருக்கும் கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக இந்த வருடமும் அடியவர்கள் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை மேற்கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.
இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவை முன்னிட்டு நல்லைக் கந்தன் ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)