Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்மந்தமாருத வேளையில் அலங்காரக் கந்தன் நல்லூரான் திருமஞ்சத்தில் வீதி உலா(Photos)

மந்தமாருத வேளையில் அலங்காரக் கந்தன் நல்லூரான் திருமஞ்சத்தில் வீதி உலா(Photos)

‘அலங்காரக் கந்தன்’ எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் பத்தாம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று வியாழக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இன்று மாலை வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து முத்துக் குமார சுவாமி, வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில் எழுந்தருளிப் பின்னர் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க அழகிய திருமஞ்சத்தில் எழுந்தருளினார்.

விசேட தீபாராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மஞ்ச வீதி உலா ஆரம்பமானது. மந்தமாருதமான மாலை வேளையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் முருகப் பெருமான் வள்ளி,தெய்வயானை நாயகியருடன் வீதி உலா வந்த காட்சி அற்புதமானது.

இன்றைய இவ்வாலய திருமஞ்சத் திருப்பவனியைக் காண்பதற்காக யாழ்.மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும், வெளி மாவட்டங்களிருந்தும், புலம்பெயர் தேசங்களிலுமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயச் சூழலில் திரண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular