யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் வேதநாயகனுக்கு அளவெட்டியில் மகத்தான கெளரவம் (Video,Photos)

அளவெட்டி மகாஜனசபையின் மணிவிழாக் குழுவின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் பணி நயப்பும் மணிவிழா மலர் வெளியீடும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(14.11.2021 காலை-09.30 மணி முதல் அளவெட்டி மகாஜன சபையின் பொ.கைலாசபதி அரங்கில் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி சபையின் தலைவர் வை.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் வேதநாயகன் தம்பதியினர் மற்றும் விருந்தினர்கள் மண்டப வாசலிலிருந்து வரவேற்று அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து ஆசியுரை, வாழ்த்துரைகள், சேவை நயப்புரைகள் என்பன இடம்பெற்றன.

அந்தவகையில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும்,பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், அளவெட்டி விநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ இ.மகாலிங்கக் குருக்கள், யாழ்.மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்கலாநிதி யோசப் ஜெபரெட்ணம் அடிகளார், அருட்கலாநிதி சு.ஜெபநேசன் அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ. வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் இ. சர்வேஸ்வரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா நாயகன் நாகலிங்கம் வேதநாயகனை வாழ்த்தியும், மெச்சியும் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து ‘கடமை தவறாக் கதிரவன் வேதா’ எனும் மணிவிழா மலரின் நூல் வெளியீட்டுரையைச் சுன்னாகம் பொதுநூலக இளைப்பாறிய நூலகர் பிரம்மஸ்ரீ க.செளந்தராஜசர்மா ஆற்றினார். அளவெட்டி மகாஜன சபையின் தலைவர் வை.சுப்பிரமணியம் குறித்த நூலை வெளியீடு செய்து வைக்க யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தம்பதிகள் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டனர். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கெளரவப் பிரதியைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து விழா நாயகன் நாகலிங்கம் வேதநாயகன் தம்பதிகள் மேற்படி விழாவின் ஏற்பாட்டுக் குழுவினர், அளவெட்டி மகாஜன சபையின் நிர்வாகத்தினர், சங்கீதபூஷணம் வி.க.நடராஜா, அளவெட்டிக் கிராமத்தின் மூத்த ஆசிரியை திருமதி.விக்னேஸ்வரி கந்தையா உள்ளிட்டோரால் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டனர்.

(செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்)