யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு(Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை(18.5.2022) பிற்பகல் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

நேற்றுப் பிற்பகல்-2.20 மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கத்தைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் தாய், தந்தையை இழந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் தணேஸ்வரன் பொதுச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக விரிவுரையாளர், கல்விசாரா ஊழியர்கள் சார்பாகவும், மாணவ, மாணவிகள் சார்பிலும் ஈகைச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றி உணர்வுபூர்வமாக மலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் மாணவ, மாணவிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர், ஊழியர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை ஒட்டிய கவிதை, பேச்சு, பாடல் எனப் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி-8 ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தால் உடைத்து அழிக்கப்பட்டது. பின்னர் தமிழ்மக்கள் மத்தியிலும், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக மீண்டும் அதே ஆண்டு ஜனவரி-11 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜா புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டி வைத்துக் கடந்த வருடம் ஏப்ரல் மாதம்-23 ஆம் திகதி மீளவும் திறந்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)