நல்லூரில் தாய்மார்களிடம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகிய விசேட அதிரடிப் படை(Photos)

நல்லூரில் விசேட அதிரடிப்படையினருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.

இறுதி யுத்த காலப் பகுதியில் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஈழத்தமிழர்களின் பேரவலமான நாட்களை நினைவுபடுத்தும் வகையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ஆரம்பநாளான இன்று வியாழக்கிழமை(12.5.2022) காலை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்குப் பரிமாறப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி நிறைவுற்ற பின் அவ்விடத்திற்கு ஜீப் வாகனம் ஒன்றில் துப்பாக்கிகளுடன் வருகை தந்த விசேட அதிரடிப்படையினருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான தாய்மார்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியைக் கொண்டு சென்று வழங்கியதுடன் குறித்த கஞ்சி தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

இதனை நன்கு செவிமடுத்த விசேட அதிரடிப் படையினர் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கிப் பருகிய பின்னர் குறித்த நிகழ்வுக்கு எந்தக் குறுக்கீடுகளும் செய்யாது அங்கிருந்து சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)