அபிஷேகக் கந்தன் எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் காம்யோற்சவப் பெருவிழா நாளை மறுதினம் திங்கட்கிழமை(04.7.2022) காலை விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாக உள்ளதாக மேற்படி ஆலய ஆதீன ஹர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் 25 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலய காம்யோற்சவத்தில் எதிர்வரும்-8 ஆம் திகதி முற்பகல்-11 மணிக்குச் சண்முகப் பெருமான் திருநடனத்துடன் வீதி உலா வரும் அருட் காட்சியும், எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகைத் திருவிழாவன்று முற்பகல்-10 மணிக்கு திருக்கார்த்திகை உற்சவமும், பிற்பகல்-03 மணியளவில் வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து கார்த்திகைக் குமரன் வெளிவீதியுலா வரும் திருக்காட்சியும் நடைபெறும். 25 ஆம் திங்கட்கிழமை வேட்டைத் திருவிழாவும், 26 ஆம் திகதி செவ்வாய்கிழமை சப்பரத் திருவிழாவும், 27 ஆம் திகதி புதன்கிழமை காலை-07 மணிக்குத் தேர்த்திருவிழாவும், மறுநாள்-28 ஆம் திகதி வியாழக்கிழமை ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலை-5 மணிக்கு மாவிட்டபுரம் கந்தப் பெருமான் வீதி உலாவாகப் புறப்பட்டுக் காலை-06 மணியளவில் கீரிமலை கண்டகி தீர்த்தக் கரையில் தீர்த்தோற்சவமும் இடம்பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்தப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)