மன்னார் மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஈழநாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், பஞ்ச ஈச்சரங்களில் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த சிவாலயமாகவும் திகழும் கெளரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை(05.7.2022) நண்பகல்-12 மணியுடன் நிறைவுபெற்றது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(03.7.2022) காலை-7.45 மணிக்கு இவ்வாலய எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் பக்திபூர்வமாக ஆரம்பமாகியிருந்தது. இந்நிலையில் மூன்று தினங்களிலும் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டு எண்ணெய்க் காப்புச் சாத்தினர்.

இதேவேளை, இந்தியாவின் சோழர் காலத்து ஆலயங்களுக்கு ஈடாக இந்திய அரசின் சுமார் முந்நூற்றி ஐம்பது மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பிலும், ஈழத்துச் சைவ அன்பர்களின் பேருதவியிலும் கருங்கற் கோவிலாகத் தற்போது அமைக்கப்பட்டுள்ள திருக்கேதீச்சரநாதர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை புதன்கிழமை(06.7.2022) காலை-9 மணி முதல் முற்பகல்-10.30 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் சிறப்பாக இடம்பெற உள்ளது.


மஹா கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதுடன் மேற்படி ஆலயச் சூழல் தற்போது விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)