Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்திருக்கேதீச்சரநாதருக்கு மஹா கும்பாபிஷேகம்: எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் அலையெனத் திரண்ட அடியவர்கள்(Photos)

திருக்கேதீச்சரநாதருக்கு மஹா கும்பாபிஷேகம்: எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் அலையெனத் திரண்ட அடியவர்கள்(Photos)

மன்னார் மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஈழநாட்டுத் தலங்களில் ஒன்றாகவும், பஞ்ச ஈச்சரங்களில் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த சிவாலயமாகவும் திகழும் கெளரியம்மை உடனாய திருக்கேதீச்சரநாதர்ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று புதன்கிழமை(06.7.2022) காலை-9 மணி முதல் முற்பகல்-10.30 மணி வரையான சுபமுகூர்த்த வேளையில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இந்தியாவின் சோழர் காலத்து ஆலயங்களுக்கு ஈடாக இந்திய அரசின் சுமார் முந்நூற்றி ஐம்பது மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பிலும், ஈழத்துச் சைவ அன்பர்களின் பேருதவியிலும் கருங்கற் கோவிலாகத் திருக்கேதீச்சரநாதர் ஆலயம் அமைக்கப்பட்டு இயற்கை அழகுடன் பேரழகு மிக்கதாகத் தற்போது எழிலுறக் காட்சி தருகின்றது.

இன்றைய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் தற்போதைய எரிபொருள் நெருக்கடியான இக்கட்டான சூழலுக்கு மத்தியிலும் மன்னார், யாழ்.மாவட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணாக்கான சைவமக்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக கிரியை, பூசை வழிபாடுகளில் ஈழத்துச் சிவாச்சாரியார்களுடன் இந்தியாவின் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாச்சாரியார்கள் பலரும், சைவத் தமிழ்ப் பெரியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாலய மஹா கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்கக் கிரியைகள் கடந்த-30 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10.45 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(03.7.2022) காலை-7.45 மணிக்கு இவ்வாலய எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் பக்திபூர்வமாக ஆரம்பமாகியிருந்த நிலையில் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(05.7.2022) நண்பகல்-12 மணியுடன் நிறைவு பெற்றிருந்தது.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular