சண்டி முனி படத்தை சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகி பாபுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் வாசு விக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்காளை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், ‘காதல்’ சுகுமார், சூப்பர் சுப்பராயன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கில் முப்பது அடி உயர சிலை அமைக்கப்பட்டது. அதன் முன் நாயகி மனீஷா யாதவ் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த நடனக் காட்சியில் 40 நடனக் கலைஞர்கள் 300-க்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். இந்த நடனத்தை பிரபல நடன இயக்குநர் அசோக் ராஜா இயக்கம் செய்தார். இதே பாடல் காட்சியில் பக்தர்கள் பக்திப் பெருக்குடன் தீ மிதிக்கும் காட்சிகளும், வேண்டுதலுக்காக ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டது. தற்போது படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. பழனி, கொடைக்கானல், நெய்க்காரன்பட்டி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.