மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகம்: யாழில் பொதுமக்கள் பெரும் அவதி!(Photos)

இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியினால் எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடர் கதையாகவுள்ளது.

இந்நிலையில் பெற்றோல் விநியோகம் இலங்கை முழுவதும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையாலும், ஏனைய எரிபொருட்களின் இருப்பின்மையாலும் யாழில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்று வியாழக்கிழமையும் (19.5.2022), இன்று வெள்ளிக்கிழமையும்(20.5.2022) மூடப்பட்ட நிலையிலிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்காக யாழ்.மாவட்டத்தின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் மக்கள் மோட்டார்ச் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் மிக நீண்ட வரிசைகளில், நீண்ட நேரமாக காத்திருந்தமையைக் காண முடிந்தது.

பெற்றோல் தட்டுப்பாடு காரணமாகப் பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதேவேளை, பெற்றோலைப் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடிநிலை காரணமாகப் பொதுமக்களின் பல்வேறு தொழில் நடவடிக்கைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)