இலண்டன் தீ விபத்து – வெளியான தகவல்கள்

இலண்டனில் தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Bexleyheath-ல் உள்ள குடியிருப்பு ஒன்றில், கடந்த வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், உயிரிழந்தவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்தில் தாய், நான்கு வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் 18 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

மேலும், இந்த தீ விபத்தில் மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்த குழந்தைகளுக்கு பாட்டி எனவும், குறித்த பெண்ணின் தாயார் என்ற விபரமும் வெளியாகியுள்ளது.

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு தன் பேரக்குழந்தைகளை பார்க்க வந்த அவரும், இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

இந்த தீ விபத்தின் போது, வீட்டின் ஜன்னல் வழியாக ஒருவர் குதித்து, தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டில் இருந்த பெண்ணின் மைத்துனர் என்று கூறப்படுகிறது.

அவருடைய உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தீ விபத்து ஏற்பட்டவுடனே அந்த பெண் உடனடியாக வேலைக்கு சென்றிருந்த தன்னுடைய கணவருக்கு போன் செய்துள்ளார்.

Yogan என்று அறியப்படும் அவர் இது குறித்து அறிவதற்குள்ளே, குடும்பத்தினர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு கடும் வேதனையில் உள்ளார். இது குறித்து Yogan-ன் உறவினர் கூறுகையில், சம்பவ தினத்தன்று இரவு 8.30 மணியளவில் அவருடைய மனைவியிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.

அவர் பேசிய போது, மனைவி தீ மற்றும் நெருப்பு என்று ஒரு வித பயத்துடன் கூறிக் கொண்டிருந்த போதே போன் கட் ஆகிவிட்டது. இதையடுத்து உடனே அவர் செல்ல முயன்றார், ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறினார்.

விபத்து நடந்த அன்று உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள், சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். அவர்கள் தீயை அணைக்க போராடியுள்ளனர். இதில் வீட்டின் தரைத் தளம் பாதி எரிந்துவிட்டதாகவும், முதல் தளம் முழுவதுமே இடிந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இன்னும் இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.