யாழ்.குப்பிழான் சிவபூமி ஆச்சிரமத்தில் திருமுறைகள் பாடி மெய்சிலிர்க்க வைத்த அமெரிக்க இளம் தொழிலதிபர் (Photos)

அமெரிக்காவின் இளம் தொழிலதிபரும், ஹவாய் சைவ ஆதீன அடியவருமான ஜோதி பரம் யாழ்.மாவட்ட மக்களின் கலை, கலாசார, பண்பாடு மற்றும் வாழ்வியலை அறிந்து கொள்வதற்காக யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று சனிக்கிழமை(21.5.2022) சிவபூமி அறக்கட்டளையின் ஆளுகைக்கு உட்பட்ட குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்திற்கு வருகை தந்தார்.

இன்று முற்பகல்-11.30 மணியளவில் சிவபூமி ஞான ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தனித் தமிழால் திருமுறைகள் மற்றும் தெய்வீகப் பாடல்களைப் பாடி அமெரிக்காவின் இளம் தொழிலதிபர் அங்கு கூடியிருந்த அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

தொடர்ந்து ஆச்சிரமத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் அவர் கலந்து கொண்டு பக்திபூர்வமாக வழிபாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் அவரது சமயப் பணிகளைப் பாராட்டிக் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரம நிர்வாகம் சார்பில் விசேடமாக கெளரவிக்கப்பட்டார்.

இதன்பின்னர் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் மற்றும் அமெரிக்க இளம் தொழிலதிபர் ஜோதிபரம் ஆகியோர் உரையாற்றினர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)