Thursday, December 1, 2022
Homeஆன்மிகம்கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஐயப்பன் மகரஜோதி மண்டல விரதப் பெருவிழா நாளை ஆரம்பம்(Photos)

கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஐயப்பன் மகரஜோதி மண்டல விரதப் பெருவிழா நாளை ஆரம்பம்(Photos)

‘ஈழத்துச் சபரிமலை’ எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் யாழ்.கோண்டாவில் ஈழத்துச் சபரிமலை ஐயப்பன் ஆலய வருடாந்த மகரஜோதி மண்டல விரதப் பெருவிழா நாளை வியாழக்கிழமை(17.11.2021) காலை-6 மணி முதல் கணபதி ஹோமம், விசேட பூசை வழிபாடுகள் என்பன இடம்பெற்றுத் தொடர்ந்து ஐயப்ப அடியவர்களுக்குப் புனித விரத மாலை அணிவித்தலுடன் ஆரம்பமாகும்.

இவ்வாலயத்தில் நாளை முதல் எதிர்வரும் தை மாதம்-14 ஆம் திகதி சனிக்கிழமை தைப்பொங்கல் திருநாளன்று இடம்பெறும் மகரஜோதிப் பெருவிழா வரை தொடர்ந்தும் 60 நாட்களுக்கு மண்டல விரத பூசைகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இவ்வாலய மகரஜோதி மண்டல விரதப் பெருவிழாவில் அடுத்தமாதம்-26 ஆம் திகதி திங்கட்கிழமை இரு முடி தேங்காய் நிரப்புதல் உற்சவமும், 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பதினெட்டாம் படி ஏறுதல், விசேட பெரிய படிப் பூசை உற்சவமும், மறுநாள் 28 ஆம் திகதி புதன்கிழமை காலை-7 மணிக்கு நெய் அபிஷேக உற்சவமும் விசேட உற்சவங்களாக நடைபெறும்.

மகரஜோதி மண்டல விரதப் பெருவிழா நாட்களில் தினமும் காலை-7 மணியளவில் கணபதி ஹோமம், பூசை வழிபாடுகளும், நண்பகல்-12 மணியளவில் விசேட பூசை வழிபாடுகளும் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். மாலை-05 மணி முதல் இரவு-09 மணி வரை மண்டலப் பூசைகளும், விசேட பஜனை, படிப் பூசை வழிபாடுகளும் இடம்பெற உள்ளதாக மேற்படி ஆலயக் குரு முதல்வரும், குருசாமியுமான சிவஸ்ரீ.கி.ஹரிகரசுத சிவாச்சாரியார் தெரிவித்தார்.

உத்தர நன்னாளான எதிர்வரும்-19 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகித் தொடர்ந்தும் பத்துத் தினங்களுக்குச் சிறப்பாக நடைபெறும் எனவும் கூறினார்.

இதேவேளை, இவ் ஆலய மகரஜோதி மண்டல விரதப் பெருவிழா மற்றும் மஹோற்சவ நாட்களில் அனைத்து அடியவர்களும் வருகை தந்து புனித விரத மாலை அணிந்து, பூசை, பஜனை வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமியின் அருள் கிடைக்கப் பிரார்த்திப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular