பிரபலமான இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்சமயம் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிற தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஸ்தூரி நடிக்க இருக்கிறார்.
விஜய் ஆண்டனி கொலைகாரன் , அக்னிச் சிறகுகள் படத்தைத் தொடர்ந்து தமிழரசன், காக்கி போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ் கோபி, பூமிகா, சங்கீதா, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்கிறார்கள். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கஸ்தூரி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். டாக்டராக நடிக்கும் கஸ்தூரின் காட்சியின் படப்பிடிப்பு துவங்கி விட்டது என்றும் இதில் விஜய் ஆண்டனியுடன் பல காட்சிகளில் கஸ்தூரி இணைந்து நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.