கனடாப் பாராளுமன்றத்தில் இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றம்: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வரவேற்பு(Photo)

அண்மையில் கனடாப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பற்றிய தீர்மானம் வரலாற்று ரீதியாக ஒரு முக்கியமான தீர்மானமாக அமைந்துள்ளது. ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக கனடாப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனிநபர் பிரேரணையைப் பாராளுமன்றம் ஏற்று இனப்படுகொலை என்பதை அங்கீகரித்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தை ஈழத்தமிழ் மக்கள் சார்பாகவும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பாகவும் நாங்கள் வரவேற்கின்றோம். இந்தத் தீர்மானத்திற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகின்றோம். அவர்களுக்கு எங்கள் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை(25.5.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் தீர்மானத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக கருத முடியாவிட்டாலும் இது எதிர்காலத்தில் கனடா நாட்டு அரசாங்கத்தின் முடிவுகள், செயற்பாடுகளில் காத்திரமான செல்வாக்கைச் செலுத்தும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.

இந்தத் தீர்மானத்துடன் மாத்திரம் நிறுத்தப்படாது ஈழத்திலே நடாத்தப்பட்ட இனப் படுகொலைக்கு ஒரு சர்வதேச விசாரணை இடம்பெறும் வரை இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் உள்ள அனைத்துத் தரப்புக்களும் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் ஈழத்தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் வேண்டி நிற்கின்றோம் எனவும் அவர் மேலும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

கடந்த-2009 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலை தொடர்பாகவும், அந்த இனப்படுகொலைக்கான நீதி சர்வதேச விசாரணை மூலமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

இந்தநிலையில் எங்கள் கட்சியையும், தலைமையையும் மலினப்படுத்தும் வகையில் ஈழத்தில் இடம்பெற்றது வெறும் யுத்தக் குற்றங்கள் என்ற போர்வையில் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை எனவும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற வகையிலும் பலரும் நிலத்திலும், புலத்திலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி, மலினப்படுத்தி வந்த தரப்புக்களுக்கு கனடாப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் ஒரு காத்திரமான செய்தியைச் சொல்லியிருக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)