ஜப்பானில் இலங்கை இளைஞர்- யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு

ஜப்பான் இலங்கை இளைஞர்- யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு (Specified Skilled Worker – SSW) இளைஞர்களுக்குத் தேவையான பரீட்சைகளை நடத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 ஜனவரி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்துகொள்வதற்கான தேவையான ஆலோசனைகளையும் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, சிறப்புத் திறன் கொண்ட இளைஞர் – யுவதிகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஜப்பானில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். இதன்படி, ஆரம்ப கட்ட நடவடிக்கைகளின் கீழ், இரண்டு முக்கிய துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.

செவிலியர் மற்றும் கேட்டரிங் சேவைகள் ஆகிய இரு துறைகள் தொடர்பான தேர்வுத் தகவல்கள், விண்ணப்பம் மற்றும் ஆலோசனைகளை இணையதளம் மூலம் பெறலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk இணையத்தளத்திற்குச் சென்று SSW ஜப்பான் பக்கத்தை அணுகுவதன் மூலம் ஜப்பானிய வேலைவாய்ப்புத் தகவல்களைப் பெறலாம்.

ஜப்பானில் நர்சிங் மற்றும் கேட்டரிங் சேவைகளுக்கு ஜப்பானிய மொழித் தேர்ச்சித் தேர்வில் (JFT) தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும், மேலும் திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் அவசியம். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுளு்ளது.