Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்குடாநாடு போன்று உலகில் வேறு எங்கும் இல்லை: யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் புகழாரம்(Photos)

குடாநாடு போன்று உலகில் வேறு எங்கும் இல்லை: யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் புகழாரம்(Photos)

யாழ்.மாவட்டத்திற்கு எனப் பல்வேறு சிறப்புக்கள் உண்டு. யாழ்.குடாநாடு போன்றதொரு அருமையானதொரு இடம் இந்த உலகத்தில் வேறு எங்கும் இல்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

பொதுமக்களிடையேயான சுகநலனில் அக்கறை கொள்ளலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் “யாழ் ஆரோக்கிய நகரம்” எனும் செயற்திட்டத்தின் கீழான “ஆரோக்கியத்தின் பாதையில்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு ஈருருளிப் பேரணி நேற்றுத் திங்கட்கிழமை(01.8.2022) யாழில் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி பேரணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத்தில் வேறு எந்த நகரிலும் இல்லாதவாறு யாழ்.மாவட்டத்தில் வலம்புரி, உதயன், தினக்குரல், காலைக் கதிர் என நான்கு பத்திரிகைகள் நாளாந்தம் வெளிவருகின்றன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கூட இவ்வாறு நான்கு தினசரிப் பத்திரிகைகள் வெளிவருவதில்லை.

நல்லூரானின் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவை உலகமே திரும்பிப் பார்க்கிறது.

இவ்வாறு பல சிறப்புக்கள் பொருந்திய யாழ்.குடாநாட்டு அன்னையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடனாகும்.

யாழ்.மண்ணில் பல புலவர்கள், அறிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவ அதிகாரிகளை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது யாழ்.மண்.

யாழ்.மக்களின் பண்பாடு, கலாசாரம் தற்போது ரொறன்ரோ, இலண்டன், பரிஸ், அமெரிக்கா என அனைத்து நாடுகளுக்கும் வியாபித்துள்ளது. எங்களின் பொங்கல் கலாசாரத்தைப் பற்றி மேற்கத்தைய நாடுகளின் தலைவர்கள் புகழ்கிறார்கள். வாழ்த்துக்கள் கூறுகிறார்கள்.

கனடா நாட்டுப் பிரதமர் யாழ்ப்பாணத்து மக்கள் தொடர்பில் புகழ்ந்து கருத்துக்கள் வெளியிடுகிறார். இதற்கு எல்லாம் காரணம் எங்கள் மக்கள் புலம்பெயர்ந்து சென்று அங்கு சிறப்பாக வாழ்ந்து காட்டுகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular