
யாழ். மாவட்டக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறலைக் கண்டித்து இன்று புதன்கிழமை(27) யாழில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள கடற்தொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள முன்றலில் இன்று முற்பகல் கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணி யாழ்.நகர் வீதிகள், ஆரியகுளம் சந்தி, ஏ-9 பிரதான வீதி ஊடாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றடைந்து இன்று பிற்பகல் நிறைவுபெற்றது.

மேற்படி கவனயீர்ப்புப் பேரணியில் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசே சட்டத்தை அமுல்படுத்து, அழிக்காதே….அழிக்காதே…. கடல்வளத்தை அழிக்காதே!, நிறுத்து….நிறுத்து அத்துமீறலை நிறுத்து! உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் பேரணியில் கலந்து கொண்டவர்கள் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் என். சுதாகரன், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத் துணைத்தூதரக அதிகாரி எஸ். கிருஷ்ணமூர்த்தி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண ஆளுநர் திருமதி- பி.எம். எஸ்.சாள்ஸ் ஆகியோரைச் சந்தித்துக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினையும் கையளித்தனர்.






{செய்தித்தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ. ரவிசாந்}