வேட்புமனுவில் ஒபிஎஸ், இபிஎஸ் கையெழுத்திட தடை கோரி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2017 செப்டம்பர் 12 இல் நடைப்பெற்ற கட்சியின் பொதுக் குழுவில் யாருடைய கருத்தையும் கேட்காமல் அதிமுக விதிகள் திருத்தப்பட்டன. இதனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும். வேட்பு மனு
எ மற்றும் பி படிவங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்குகளுக்கு இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதிமுக வேட்பு மனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது எனக் கூறி, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.