தென்னிலங்கைத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், வட-கிழக்குப் பொது அமைப்புக்களுக்கும் இடையில் யாழில் முக்கிய கலந்துரையாடல்(Photos)

தென் இலங்கையில் இடம்பெறும் தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் தென்னிலங்கையைச் சேர்ந்த தொழிற்சங்க வெகுஜன அமைப்பு ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும், வட, கிழக்கைச் சேர்ந்த 20 வரையான தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்களின் பிரதிகளுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (29.5.2022) முற்பகல்-10 மணி தொடக்கம் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொது மண்டபத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் நடைபெற்றது.

வட-கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, வட-கிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கல் போன்ற பிரச்சினைகளையும் தென்னிலங்கையில் இடம்பெறும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கோரிக்கைகளாக எடுத்துச் செல்வது தொடர்பிலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் தென்னிலங்கையில் இடம்பெறும் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு, வட- கிழக்குத் தமிழ்மக்கள் தென்னிலங்கைப் போராட்டங்களிற்கு ஆதரவு வழங்காமல் ஒதுங்கியிருப்பதற்கான காரணங்கள் ஆகியன தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று பிற்பகல்-1.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது முதற்கட்டமாக இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளதாகவும், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)