Sunday, February 5, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்யாழில் கொட்டித் தீர்த்த கனமழை: தெல்லிப்பழையில் மீண்டும் அதிகூடிய மழைவீழ்ச்சி!

யாழில் கொட்டித் தீர்த்த கனமழை: தெல்லிப்பழையில் மீண்டும் அதிகூடிய மழைவீழ்ச்சி!

யாழ்.மாவட்டத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை(10.11.2022) மாலை-5 மணியளவில் கடும் மழை வீழ்ச்சி ஆரம்பமாகிச் சுமார் 30 நிமிடங்கள் கடும் மழை பெய்தது. பின்னர் இரவு-8.45 வரை மிதமான மழைவீழ்ச்சியும் இடையிடையே கடும் மழையும் பெய்தது.

பின்னர் இரவு-10.30 மணி முதல் நேற்றுக் காலை-7.30 மணி வரை தொடர்ச்சியான மழை பெய்துள்ளது. குறித்த காலப் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

இதனால், தாழ்நிலப் பகுதிகள் பலவும் வெள்ளத்துள் மூழ்கி உள்ளதுடன் வீதிகள் பலவும் அதிக மழை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகின்றது. கனமழை காரணமாக வலிகாமத்தின் விவசாய நிலங்கள் பலவும் மீண்டும் மழைவெள்ளக் காடாக காட்சியளித்தன.

யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 305 குடும்பங்களைச் சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் வியாழக்கிழமை(10.11.2022) காலை-8.30 மணி முதல் நேற்று வெள்ளிக்கிழமை(11.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 153.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

மேற்படி காலப் பகுதியில் பருத்தித்துறையில் 150.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், சாவகச்சேரியில் 135.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அச்சுவேலியில் 130.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வடமராட்சி அம்பனில் 124.0 மில்லிமீற்றர் மலைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 108.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.நகரத்தில் 83.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணம் கோட்டையில் 72.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நயினாதீவில் 33.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், நெடுந்தீவில் 10.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளன.

அத்துடன் குறித்த காலப் பகுதியில் ஆனையிறவில் 143.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், இரணைமடுவில் 83.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அக்கராயனில் 93.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கிளிநொச்சி நகரத்தில் 72.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular