சுவிஸ் வாழ் ஊழியர்களுக்கு நற்செய்தி!

கொரோனா நெருக்கடியிலிருந்து சுவிஸ் பொருளாதாரம் மீண்டு வருவதால் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் சுவிட்சர்லாந்தில் குறைந்தபட்ச ஊதியமாக 4,000 பிராங்குகள் என உறுதி செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் முக்கிய தொழிற்சங்கமான umbrella குழுமம், குறைந்தபட்சம் 2% அல்லது மாதத்திற்கு 100 பிராங்கள் சம்பள உயர்வு பெற ஊழியர்களுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்க தலைவர் Pierre-Yves Maillard தெரிவிக்கையில், இந்த ஊதிய உயர்வானது கொரோனா காலகட்டத்தில் அவர்களின் முயற்சிகள் மற்றும் வளர்ந்து வரும் சுமார் 1% பணவீக்கத்திற்கு ஈடுசெய்யும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் உற்பத்தி நிலை மற்றும் இலாபம் அதிகரித்த நிலையில் ஊதிய நிலைகள் மட்டும் தேக்கமடைந்துள்ளன என்றார் தொழிற்சங்க தலைமை பொருளாதார நிபுணர் டேனியல் லம்பார்ட்.

20 வெவ்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 370,000 ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த கூட்டமைப்பு, குறைந்த ஊதிய வேலைகளில் உள்ள பெண்கள் கணிசமான ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.

மேலும், மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் குறைந்தது 4,000 பிராங்குகள் என இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.