நடிகர் சூர்யா உருவப்படத்தை எரித்தால் தங்க நாணயம் இலவசம்

நடிகர் சூர்யாவின் உருவப்படத்தை எரித்தால் அரை பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் என வன்னியர் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியானதில் இருந்து இப்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இருப்பினும் இப்படத்தில் சில காட்சிகளில் வன்னியர்களை மையப்படுத்தி கூறியுள்ளதால் சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதனால் சூர்யாவுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தையும், குருவையும் கேவலப்படுத்தியதாக ஜெய்பீம் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினரை கைது செய்யக் கோரி தஞ்சாவூரில் நேற்று வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது.

அதில் அவர் பேசியதாவது, வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதை பொறுக்க முடியாது. இதில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையேல் அடுத்த மாதம் 23ஆம் திகதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள வன்னியர் வாழும் கிராமங்களில் அக்னி குண்டத்தில் நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து போராட்டம் நடத்தப்படும்.

அப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு அக்னி கும்பம் படம் பொறித்த அரை பவுன் தங்க காசு டாலர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.