2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை(23.01.2023) நாடு முழுவதும் ஆரம்பமானது.
இன்று ஆரம்பமான பரீட்சை அடுத்தமாதம்-17 ஆம் திகதி வரை 2200 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற உள்ளது.
இந்நிலையில் குறித்த பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 139 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 17 ஆயிரத்து 555 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் பரீட்சை மத்திய நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளிற்கு மாணவர்கள் இன்று ஆர்வத்துடன் பரீட்சை எழுதச் சென்றமையை அவதானிக்க முடிந்தது. பெரும்பாலான மாணவர்கள் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டுப் பரீட்சைக்குச் சென்றதுடன் பெற்றோர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் தங்கள் பிள்ளைகளை வழி அனுப்பி வைத்தமையையும் காண முடிந்தது.
இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரும் சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையமொன்றில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)