Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்சிங்கள மக்கள் கண்களைத் திறக்க வேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி காட்டம்(Photo)

சிங்கள மக்கள் கண்களைத் திறக்க வேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி காட்டம்(Photo)

அரச தரப்பினர் இன்றுவரை மாறாமலிருப்பது நாங்கள் எதிர்பார்க்கக் கூடியதொன்று தான். எனினும், சிங்கள மக்கள் தமிழ்மக்கள் தொடர்பில் இதுவரை தங்கள் அக்கறையைச் செலுத்தாமலிருப்பது எங்களைப் பொறுத்தவரை மிகப் பெரியதொரு ஏமாற்றம் எனச் சுட்டிக் காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போதைய சூழலிலாவது சிங்கள மக்கள் தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் உணர்ந்து தங்களின் கண்களைத் திறக்க வேண்டும். இல்லாவிடில் இலங்கை நாடு தோல்வியடைந்த நாடாக, அரசாக நிச்சயம் பதிவு செய்யப்படும். தற்போது அந்த எல்லை வரை இந்த நாடு வந்துள்ளது எனவும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை(28.6.2022) நண்பகல்-12 மணிக்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இன அழிப்பை மேற்கொண்டவர்கள் தங்கள் இருப்புக்காகவும், தங்கள் நண்பர்களையும், சொத்துக்களையும் வளர்ப்பதற்காகவும், தேர்தலில் வெல்வதற்காகவும் தங்கள் சார்ந்த, தங்கள் கட்சி சார்ந்த வகையில் எடுத்த முடிவுகளால் தற்போது சாதாரண மக்களின் சொத்துக்களே அழிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழ்மக்களைப் பொறுத்த வரை வட- கிழக்கு 30 வருடங்களாகப் பொருளாதாரத் தடைக்குள் தள்ளப்பட்டிருந்தது.

எனவே, சிங்கள மக்கள் அடிப்படையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக வேண்டும். தமிழ்த் தேசத்தின் உரிமைகள், அவர்களின் அடையாளங்கள், அந்தஸ்துக்கள் அனைத்தையும் அங்கீகரிப்பதற்கு உரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தைப் போடுவதற்குத் தயாராக இல்லாவிடில் இந்த நிலைமை இன்னும் தொடரும்.

ஆகவே, அந்த அடிப்படை மாற்றங்களை உறுதிப்படுத்தாமல் தமிழ்மக்கள், முஸ்லிம் மக்கள் தங்கள் விழிப்புணர்வைக் கைவிட்டுத் தளர்வானதொரு நிலைக்குச் செல்லக் கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள்.

தற்போது பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்க உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் செய்வதற்கும், அதற்கான ஊக்குவிப்பை வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், புலம்பெயர் உறவுகள் தமது தாயகமான வட- கிழக்கில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தயாராக உள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்திப் பயன்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகளைச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular