எரிபொருள் வழங்கலில் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தொடர்பில் எங்களுக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால், சாதாரண மக்களும் வாழ வேண்டும் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை(28.6.2022) நண்பகல் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜீலை-10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சாதாரண மக்கள் தங்கள் விவசாயத்தை, கடற் தொழிலை மற்றும் ஏனைய தொழில்களை மேற்கொள்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்காமல் தொடர்ந்தும் இரண்டு வாரங்களுக்கு அவர்களின் தொழில்களை முன்னெடுக்க முடியாதவாறான ஒரு தீர்மானம் எக் காரணம் கொண்டும் ஒரு தீர்வாக அமையாது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)