Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்தற்போதைய ஆட்சி ஜனநாயகத்தை முற்றுமுழுதாகக் கேலிக் கூத்தாக்கும் ஆட்சி!

தற்போதைய ஆட்சி ஜனநாயகத்தை முற்றுமுழுதாகக் கேலிக் கூத்தாக்கும் ஆட்சி!

தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் ஆட்சி ஜனநாயகத்தை முற்றுமுழுதாகக் கேலிக் கூத்தாக்குகின்றதொரு ஆட்சி எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தற்போதைய அரசுக்கு எதிராகச் செயற்படுவது என முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதை வன்மையாகக் கண்டித்தும், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்டச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (05.8.2022) முற்பகல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்ட, தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி பாராளுமன்றம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றார். இது முற்றுமுழுதாக மக்களால் உதாசீனம் செய்யப்பட்டதொரு தெரிவு. மக்களை நம்பியிருந்தால் அவருக்கு ஒருபோதும் ஆட்சிப் பீடம் ஏற முடியாது என்பது தெரிந்திருக்கும் நிலையில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தித் தன்னுடைய உண்மையான பாசிச முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் தற்போது செயற்படத் தொடங்கியிருக்கின்றார்.

எதிர்வரும்-10 ஆம் திகதி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்துவதற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜோசப் ஸ்ராலினும், தெற்கில் ஜனநாயகத்துக்காகப் போராடிக் கைது செய்யப்பட்டவர்களும் விடுவிக்கப்படும் வரை நாங்கள் ஜனாதிபதியையோ, தற்போதைய அரசாங்கத்தையோ சந்திக்கப் போவதில்லை. கைது செய்யப்பட்ட ஜனநாயகப் போராளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படும் வரை அனைத்துப் போராட்டங்களுக்கும் எங்களின் முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் என்பதையும் நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular