கோப்பாயில் இன்றும், நாளையும் இரண்டாம் கட்ட இலவச மரவள்ளித் தடிகள் விநியோகம்

நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் பட்டினி அவலம் இலங்கையில் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட நிர்வாகம் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் “பஞ்சம் வருமுன் பயிரிடுவோம்” எனும் தொனிப் பொருளில் தொடர் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒருகட்டமாக யாழில் வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டாம் கட்டமாக இலவச மரவள்ளித் தடிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமையும்(22.5.2022), நாளை திங்கட்கிழமையும்(23.5.2022) பிற்பகல்-04 மணிக்குப் பழைய வீதி, கோப்பாயில் உள்ள ஸ்ரீசுப்பிரமுனிய கோட்ட வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரவள்ளித் தடிகள் விநியோகிக்கப்படவுள்ளது.

எனவே, ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இணைந்து இலவச மரவள்ளித் தடிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், மேலதிக தகவல்களுக்கு 0769775730 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)