Tuesday, September 27, 2022
Homeஆன்மிகம்ஏழாலை சூராவத்தை முத்துமாரி அம்பாள் தேர்த் திருவிழா வெகுவிமரிசை(Photos)

ஏழாலை சூராவத்தை முத்துமாரி அம்பாள் தேர்த் திருவிழா வெகுவிமரிசை(Photos)

யாழ்.ஏழாலை தெற்கு சூராவத்தை முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(10.8.2022) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை-6.30 மணியளவில் தேர்த் திருவிழாக் கிரியைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து காலை-8 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

தொடர்ந்து முத்துமாரி அம்பாள், விநாயகப் பெருமான் சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்கள் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளினர்.

முற்பகல்-10.30 மணியளவில் முத்தெய்வங்களும் முத்தேர்களில் ஆரோகணம் செய்ததைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம், தவில் நாதஸ்வர முழக்கங்களுடன் முழங்க முத்தேர் பவனி ஆரம்பமானது.

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்கள் சிதறு தேங்காய்கள் உடைத்தனர். தொடர்ந்து ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து முத்தேர்களின் வடம் தொட்டிழுத்தனர்.

முற்பகல்-11.45 மணியளவில் முத்தேர்களும் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டனர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்படி ஆலயச் சூழலில் ஜொனியன்ஸ் சனசமூக நிலையத்தினரால் முதன்முதலாகத் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு அடியவர்களின் தாகம் தீர்க்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி வேறுசில தாகசாந்தி நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் தேர்த் திருவிழாவை முன்னிட்டு அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.

இதேவேளை, இவ்வாலயம் சுமார்-300 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் எனவும், கடந்த-1982 ஆம் ஆண்டு முதல் மஹோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருவதாகவும் மேற்படி ஆலய பரிபாலனசபைத் தலைவர் சிவஸ்ரீ. ம.சுயம்புலிங்கம் தெரிவித்தார்.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular