Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்சிறப்பிக்கப்பட்ட யாழ்.ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் முத்தேர் பவனி(Photos)

சிறப்பிக்கப்பட்ட யாழ்.ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் முத்தேர் பவனி(Photos)

‘ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான யாழ்.ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் பவனி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(31.7.2022) வெகுசிறப்பாக நடைபெற்றது.

காலை-7.30 மணிக்குச் சங்கல்பம், வழிபாடுகளுடன் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து முற்பகல்-10 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து திருநடனத்துடன் புவனேஸ்வரி அம்பாள், விநாயகப் பெருமான், வள்ளி, தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய முத் தெய்வங்களும் உள்வீதியில் வலம் வந்து முற்பகல்-11.45 மணியளவில் முத்தெய்வங்களும் முத் தேர்களில் எழுந்தருளினர்.

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டுச் சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, மங்கள வாத்தியங்களின் முழக்கத்துடன் முத்தேர் பவனி ஆரம்பமானது. ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து முத் தேர்களையும் வடம் தொட்டிழுத்தனர்.

பிற்பகல்-1.15 மணிக்கு முத் தேர்களும் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு மேற்படி ஆலயச் சூழலில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டுக் குளிர்மை மிகு பானங்கள் பரிமாறப்பட்டதுடன் அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.

இதேவேளை,ஏழாலை இந்து இளைஞர் மன்றத்தினர் ஆலயத் தொண்டுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular