Friday, February 3, 2023
HomeTamilவிளையாட்டுதேசிய மட்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இரட்டைச் சம்பியன்: சாதித்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி...

தேசிய மட்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இரட்டைச் சம்பியன்: சாதித்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி பெண்கள் அணி

தேசிய மட்ட உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் 20 வயதுக்கு உட்பட்ட உதைபந்தாட்டப் பெண்கள் அணியும் வெற்றியீட்டிக் கல்லூரிக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

இதன்மூலம் அடுத்தடுத்துச் சம்பியனாகி இரட்டைச் சம்பியனை மேற்படி கல்லூரியின் உதைபந்தாட்டப் பெண்கள் அணியினர் வென்று மகத்தான சாதனையை நிலைநாட்டி உள்ளனர்.    

இன்று வெள்ளிக்கிழமை(25.11.2022) பிற்பகல் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற 20 வயதுக்கு உட்பட்ட தேசிய மட்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் குருநாகல் மலியதேவ பெண்கள் மகா வித்தியாலயத்துடன் யாழ்.தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி பெண்கள் அணி மோதியது.  

விறுவிறுப்பாக இடம்பெற்ற இன்றைய இறுதிப் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் யாழ்.தெல்லிப்பழை  மகாஜனாக் கல்லூரியின் வீராங்கனை கிரிசாந்தினி 2 கோல்களை அணிக்காகப் பெற்றுக் கொடுக்க முதல் பாதி ஆட்டத்தில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி.அணியினர் 2: 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இடைவேளையைத் தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது பாதி ஆட்டத்தில் மீண்டும் கிரிசாந்தினி அணிக்காக ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார். இதனையடுத்து தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியினர் தொடர்ந்தும் 3: 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனால், தொடர்ந்தும் கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் யாழ்.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அணியினர் சம்பியனாகத் தெரிவானது

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை(24.11.2022) கொழும்பு களனிப் பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுப் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பொலனறுவை  பன்டிவெவ மகாவித்தியாலயத்துடன் யாழ்.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி மோதி 2.0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)    

RELATED ARTICLES

Most Popular