Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்தற்போதைய பொருளியல் பிரக்ஜை பற்றிய விழிப்பு தமிழ்மக்கள் அனைவருக்கும் அவசியம்: மருத்துவர் யமுனானந்தா

தற்போதைய பொருளியல் பிரக்ஜை பற்றிய விழிப்பு தமிழ்மக்கள் அனைவருக்கும் அவசியம்: மருத்துவர் யமுனானந்தா

தற்போதைய பொருளாதார நெருக்கீட்டு நிலையில் விரக்தியடைதலும், வன்முறைகளில் ஈடுபடுதலையும் எமது சமூகம் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனது குடும்பத்தை எவ்வாறு பொருளாதாரக் கஸ்டத்தின் மத்தியிலும் முன்னேற்றலாம் என முயற்சித்தால் எமது சமூகம் உறுதியாக இருக்கும். சிறுசிறு பொருளாதார முயற்சிகள், ஆடம்பரச் செலவைத் தவர்த்தல், எம்மிடம் உள்ள வளங்களின் சரியான பயன்பாடு தற்போதைய சூழலில் அவசியமானவை எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா தற்போதைய பொருளியல் பிரக்ஜை பற்றிய விழிப்பு தமிழ்மக்கள் அனைவருக்கும் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலக வரலாற்றை மாற்றியமைக்கும் பெரும் தொற்று நோய்களால் (Pandemics) கிரேக்க இராச்சியம், சேர இராச்சியம், பிரான்ஸ் அரசு, ரஷ்யா அரசு, பிரித்தானிய அரசு போன்றவை பாதிக்கப்பட்டன. மனித நாகரீக வளர்ச்சியினை நோய் பெரும் தொற்றுக்கள் மாற்றியமைப்பதனை நாம் வரலாற்றில் பல தடவைகள் நோக்கியுள்ளோம். பெருந் தொற்றுக்குப் பின்னர் அரசுகளின் வீழ்ச்சியும், மக்களின் புலம் பெயர்வும் புதிய அரசுகளின் உருவாக்கங்களையும் அவதானிக்க முடியும்.

1700 ஆம் ஆண்டளவில் பிளேக் நோய் ஐரோப்பாவை நிலைகுலைய வைத்தது. இதன்பின் பிரித்தானியா வல்லரசாக எழுச்சியடைந்தது. 1813 ஆம் ஆண்டளவில் கொலராநோய் உலகை கொள்ளையிட்டது. இதன்போது இந்தியாவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கொலரா நோய்க்குப் பின் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் தமிழகத்தில் இருந்து பெருமளவு தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கை, மலேசியா, மொறீசியஸ், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் கூலிகளாக குடியேற்றப்பட்டனர்.

1913 ஆம் ஆண்டளவில் ஸ்பானிய சளிச்சுரம் மூலம் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக 1ஆம், 2ஆம் உலகப்போர்கள் ஏற்பட்டு உலக வல்லரசுகள் தம்மை நிலைப்படுத்த முயன்றன. அவ்வாறே 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவிட் தொற்றின் பொருளாதாரத் தாழ்வை ஈடுகட்டவே ரஷ்யா உக்ரெயினை ஆக்கிரமித்தது. இதனால் உலக வலுச்சமநிலைப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா ஒருபுறமும் ரஷ்யா மறுபுறமும் சீனா இன்னொரு புறமும் உள்ளது.

இச் சந்தர்ப்பத்தில் இந்தியா அமெரிக்கா சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. ஏனெனில், அவ்வாறு அமெரிக்கா சார்ந்த நிலையில் நிற்பின் பாகிஸ்தான், சீனா என்பன ரஸ்சியாவுடன் நேரடியாக இணைந்து இந்திய- பாகிஸ்தான் எல்லை, இந்திய- சீனா எல்லை என்பவற்றில் பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகும். மேலும் ரஷ்யாவில் இருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதனால் இந்தியாவில் உற்பத்தித்திறன் மாறாது உள்ளது. இந்திய சார்புப் பொருளாதார மேல் நிலையே இலங்கையின் பொருளாதாரம் மேநிலை அடைய உதவும். இதனைத் தமிழ்மக்களும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

தற்போதைய பொருளாதாரத் தளம்பல்நிலை 1813 – 1820 இல் தமிழகத்தில் கொலராத் தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரத் தளம்பல் நிலைக்கு ஒத்தது. எனவே, வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களாயினும் சரி, மலையகத் தமிழர்களாயினும் சரி நாம் மீண்டும் எம் வாழிடங்களை விட்டுப் பொருளாதாரக் கஸ்டத்திற்காக புலம்பெயர முயற்சிக்கக் கூடாது. மலையகத் தமிழர்கள் கடந்த 200 வருடங்களாக அனுபவிக்கும் வேதனைகளையே நாம் இன்று எம் மண்ணில் இருந்து புலம்பெயர்ந்தால் எதிர்வரும் 200 வருடங்களுக்கு அனுபவிக்க நேரிடலாம். தற்போதைய பொருளாதார நெருக்கடியினைத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்ற வினாவிற்கு ஆணித்தரமான பதிலை நோக்கலாம்.

எமது வாழ்விற்கு ஆதாரமான விவசாயத்தை நாம் முழுமூச்சுடன் செய்தல் அவசியம். வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல், வெற்றுக் காணிகளில் கூட்டுறவு அமைப்பில் தோட்டங்கள் செய்தல், கிராமங்களில் கூட்டுறவு அடிப்படையில் பண்ணைகள் வைத்தல் மிகவும் இன்றியமையாதவையாகும்.

இன்று நாம் எமது தொழில்பாகுபாடு இன்றி வீதிகளில் பல மணித்தியாலங்களாக எரிபொருட்களுக்காக நேரத்தை விரயம் செய்யவேண்டி உள்ளது. இவை எமது அடிப்படை உழைக்கும் நேரத்தை குறைத்துள்ளது. எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அருகி வருகின்றது. தற்போதைய அவலநிலையில் வர்த்தகக் கூட்டுறவு அமைப்புக்கள் புதிய அணுகுமுறையில் செயற்பட வேண்டிய தேவை உள்ளது.

நாம் இரண்டு வருடங்கள் கடினமாக சமூக மேன்மைக்குத் திட்டங்கள் வகுத்தால் அடுத்த 200 வருடங்களுக்கு எம்மினம் இந்நிலத்தில் இயல்பாகவே வாழும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி உலகளாவிய ரீதியில் நாடுகளுக்கு இடையே உள்ள நிர்வாக எல்லைகளை மாற்றி அமைக்கின்றது. பல நாடுகள் இணைந்து செயற்பட வேண்டிய சூழல் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதாரத்தை நிலைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியத்தை எவ்வாறு அமைத்தார்களோ அவ்வாறே எமது பிராந்தியமும் இணைந்து செயற்பட வேண்டிய பொருளாதாரத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய பொருளியல் பிரக்ஜை பற்றிய விழிப்புத் தமிழ்மக்கள் அனைவருக்கும் அவசியம்.

உலக பொருளாதார மேன்மையில் தற்போது பாரத தேசமே தளம்பல் அற்றநிலையில் உள்ளது. எனவே பாரததேசத்தை ஒன்றிய எமது சகவாழ்வே எம்மை அழிவிலிருந்து மீட்கும் எனவும் வைத்தியகலாநிதி சி.யமுனானந்தா மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular