fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » மாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்!
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்படல் வேண்டும்!

மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட- கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஓர் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுக்கப் போவதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.

மாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம் வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கம் என்பவற்றை வலியுறுத்தியும் DATA தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டோர் சார்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்றுச் சனிக்கிழமை(10.04.2021) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் DATA அமைப்பின் இயக்குனர் திரு. க. ஜீவராசா, மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் து. அரிதாஸ், சம்மேளன ஆலோசகர் சோ. புவிராசசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினார்கள். இந்தச் சந்திப்பில் DATA இயக்குனர் ச. அருள்மொழியும் கலந்து கொண்டார்.

இதேவேளை, மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அறிக்கையின் முழு விபரம் இதோ…

மாற்றுத்திறனாளிகள் விடுத்துள்ள கோரிக்கை

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில், பாதிக்கப்பட்டோர் சார்பாக மலரும் புத்தாண்டில் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இந்த ஆண்டில் நிறைவேற்றித்தருமாறு அன்போடு வேண்டுகின்றோம்.

  1. மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்.
  2. மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா 10,000 நிதியுதவி.
  3. பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்.
    அத்தோடு போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்தான கொள்கை
    உருவாக்கத்தையும் கோருகின்றோம்.

போர் ஓய்ந்து 12 வருடங்களைக் கடக்கின்றோம். போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றைய மாகாணங்களிலும் பார்க்க அதிகம்.

பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அவர்களின் வலியை ஆற்றுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் இலங்கை அரசும், மாகாண அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், உறவுகளும் ஆற்றிவரும் சேவைகளை நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

இருந்த போதும் எமது தேவைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது என்பதை நாம் எமது உறவுகளின் முன் சொல்ல வேண்டியுள்ளதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.

  1. மாவட்டம் தோறும் மாற்றுத் திறனாளிகள் காப்பகம்

மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்ட கால தேவையாக உள்ளது. இன்னொருவரில் முழுமையாக தங்கி வாழ்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமக்கான ஒரு காப்பகங்கள் இல்லை என ஏங்குகின்றார்கள். அவ்வாறான காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோருகின்றோம்.

  1. மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா 10,000 நிதியுதவி

இன்னொருவரில் பெரிதும் தங்கி வாழ்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபா 10,000 மாதாந்த உதவித் தொகையாக கொடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
உதாரணமாக,

  1. முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள்
  2. இரண்டு கரங்களையும் இழந்தவர்கள்
  3. பல அங்கங்களை இழந்தவர்கள்
  4. இரண்டு கண்களையும் இழந்தவர்கள்
  5. இரண்டு கால்களையும் முற்றாக இழந்தவர்கள்
  6. முதுமையில் அநாதைகள் ஆக்கப்பட்டவர்கள்

3.பாதிக்கப்பட்டோர் அமைப்புக்கள் இயங்குவதற்கான உதவிகள்

கிராமங்களை மையப்படுத்தி இயங்கிவரும் பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு, அவை தொடர்ச்சியாக இயங்குவதற்குப் பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.

(யாழ்.தர்மினி)

Related posts

யாழில் இன்று 14 பேருக்கு கொரோனா!

N N

ஊரடங்கு உத்தரவு: யாழில் சாராயக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

World News

தமிழக அரசு மருத்துவர்களுக்கு அமைச்சரின் எச்சரிக்கை! பணிக்கு திரும்பா விட்டால் நடவடிக்கை

World News