கோமாதா வழிபாடு சைவர்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்ததொரு விடயம். எங்களுக்கு நிறை உணவான பாலைத் தருவது மாத்திரமன்றி சிவசின்னமான விபூதி உள்ளிட்ட பல பயன்களை கோமாதா மூலம் நாம் பெற்றுக் கொள்ள முடிகிறது எனப் புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற பட்டிப் பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை(16.01.2023) பிற்பகல் யாழ்.நகரில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கோபவனியைத் தொடர்ந்து மேற்படி ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு கோமாதாவின் சிறப்பை எடுத்தியம்பும் வகையில் வருடம் தோறும் யாழ்.நகரில் பட்டிப் பொங்கல் விழாவை முன்னெடுத்துச் செல்வது வரவேற்புக்கு உரியது. பாராட்டுதற்கு உரியது. இந்த விழாவில் பல தடவைகள் நானும் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன்.
தொடர்ந்தும் இவ்வாறான விழாக்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதன்மூலம் சைவத்தின் பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)