கிளிநொச்சியில் வீழ்ச்சியடைந்து வரும் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை!

ஓகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் உயர்வடைந்திருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

கிளிநொச்சியில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பிராந்தியச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர் மற்றும் ஊழியர்களும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி- றூபவதி கேதீஸ்வரன் தலைமையிலான மாவட்டக் கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் இதற்கு வேண்டிய முழு ஒத்துழைப்பையும் வழங்கித் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரணம் உள்ளிட்ட விடயங்களை உரிய முறையில் கையாண்டனர்.

குறிப்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை உரிய நேரத்துக்குப் பெற்றுத் தந்ததுடன் அவரது இணைப்பாளர்கள் கோவிட் கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கிச் சுகாதாரத் துறையினரை ஊக்கப்படுத்தினர்.

இந்த முயற்சிகளின் பயனாக செப்டெம்பர் மாத முற்பகுதியிலிருந்து கொரோனாத் தொற்று நிலைமை மேற்படி மாவட்டத்தில் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்த நிலைமையினைப் பதிவு செய்ய முடிகிறது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கோவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் கோவிட் தொற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிராந்தியச் சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் சரவணபவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.