4 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சிறுவர்கள்

4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளி கொன்ற 13 மற்றும் 11 வயது சிறுவர்களை பொலிஸ்சார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகேயிருக்கும் விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகர் பகுதியை சார்ந்தவர் பார்த்தீபன். இவரது மனைவி கவியரசி. இவர்கள் இருவருக்கும் பிரயதர்சன் என்ற 8 வயது மகனும், தீனதயாளன் என்ற 4 வயது மகனும் என 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களின் அண்டை வீட்டு சார்ந்தவர் அல்போன்சா. இவர் வீட்டு கட்ட வீட்டின் முன்புறம் மணல் இறக்கி வைத்துள்ளார். இந்த மணலில் சிறார்களான பார்த்தீபனின் மகன் தீனதயாளன் விளையாடியுள்ளான். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த அல்போன்சா கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பார்த்தீபன் அல்போன்சாவிடம் வாக்குவாதம் செய்யவே, இது இரு குடும்ப பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த விஷயத்தில் ஆத்திரமடைந்த அல்போன்சாவின் பேரன்கள் பிரவீன்குமார் (வயது 13), அஜய் (வயது 11) ஆகியோர், பார்த்தீபனின் மகன் தீனதயாளனை கடைக்கு செல்லலாம் என நயவஞ்சகமாக அழைத்து சென்றுள்ளனர்.

பெரியோர்கள் சண்டை விபரமறியா சிறுவனுக்கு என்ன தெரியும்?. சிறுவனும் அவர்களுடன் சென்ற நிலையில், விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை காணவில்லை என பார்த்தீபன் மற்றும் கவியரசி அக்கம் பக்கத்தில் தேடி இருக்கின்றனர்.

குழந்தை காணாததால் பதற்றத்திற்கு உள்ளாகிய பார்த்தீபன் – கவியரசி தம்பதி, சிவகாசி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அல்போன்சாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையில், பிரவீன் குமார் மற்றும் அஜய் 4 வயது குழந்தையான தீனதயாளனை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுவர்களின் வாக்குமூல அடிப்படையில் அவர்கள் கூறிய கிணற்றுக்கு சென்ற பொலிஸ்சார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியுடன் 4 வயதாகும் தீனதயாளனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலையை செய்த பிரவீன் குமார் (வயது 13), அஜய் (வயது 11) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.