fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் ஆன்மிகம் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘யோகா’ வெகுவிரைவில் ஒரு பாடமாகிறது (Video, Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரீகபீடம் ஆரம்பமாகியுள்ளது. இந்துநாகரீகம் தொடர்பான பாடத் திட்டத்தை எழுதுகின்றவர்களில் ஒருவராக என்னையும் அழைத்திருந்தார்கள். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவுள்ள பேராசிரியர் சிறிசற்குணராஜா, பேராசிரியர் கோபாலகிருஷ்ண ஐயா, பேராசிரியர் வேதநாயகம், பேராசிரியர் கலாநிதி- சுகந்தி முரளிதரன் எனப் பலரும் ஒரு குழுவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீக பீடத்தின் எதிர்காலத் திட்டமிடல்கள் தொடர்பிலொரு அறிக்கையை இலங்கைப் பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்தோம். பல்கலைக்கழக ஆணைக்குழு அதனை அங்கீகரித்திருந்தது. வெகுவிரைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் யோகா ஒரு பாடமாக அமையவுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

இயற்கை உணவு மூலிகை வைத்தியர் நாகலிங்கம் குலசிங்கம் எழுதிய “சித்தர்கள் வழி யோகா மற்றும் உணவு மருத்துவம்” எனும் நூல் வெளியீட்டு விழா இணுவில் மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் மண்டபத்தில் கைதடி சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர் வைத்தியகலாநிதி எஸ். சிவராசா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

மேற்படி விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயர்தர வகுப்பு மாணவர்கள் இந்துநாகரீகம், இந்துசமயம் போன்ற பாடங்களில் பரீட்சையில் சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் செல்கின்ற போது ஒரு தனிப்பாடமாக யோகாவைக் கற்பதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறை தொடர்பான பாடத் திட்டத்தைத் தயாரிக்கின்ற போது அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். என்னை விளையாட்டு வீரன் என அழைக்கவில்லை. அந்தப் பாடத் திட்டத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடத் திட்டத்தை தயாரிப்பதற்காக அழைத்தார்கள்.

சிவபூமி பாடசாலை மற்றும் பார்வையில்லாத பிள்ளைகளுக்கான விளையாட்டுத் துறை தொடர்பாக எத்தனையோ நாட்களாக விடயங்களை ஆயத்தப்படுத்திப் பல்கலைக்கழக்த்திற்கு அதனைச் சமர்ப்பித்தேன். பல்கலைக்கழக விளையாட்டுத் துறை பட்டப் படிப்புத் தொடர்பான பாடத் திட்டத்திலே விசேட தேவையுடையவர்களுக்கான விளையாட்டுத் துறை தொடர்பாக எழுதுகின்ற போது விளையாட்டு வீரர்களுக்கு கட்டாயம் யோகக் கலை அவசியமென்ற அடிப்படையில் அந்தத் துறையையும் சேர்ந்திருக்கிறார்கள்.

யோகக் கலை என்பது எங்கள் சமயத்தவர்களின் உன்னதமானதொரு சொத்து. இந்த யோகக் கலை தொடர்பாக உபநிடதங்களிலேயே பேசப்பட்டுள்ளது. எங்களுடைய சமய செய்திகளில் தெய்வ வடிவங்களிலே யோகநிலையில் நின்று அருள்பாலிக்கின்ற சிவதெட்சணாமூர்த்தி தொடக்கம் சித்தர் பாரம்பரியம் பேசப்படுகிறது.

ஒரு தாயின் வயிற்றிலே குழந்தை இருக்கின்ற போதே இரண்டு கைகளையும், கால்களையும் யோகாசனம் செய்வது போன்று தான் தொப்புள் கொடி உறவொன்று தப்பிப் பிழைப்பதாக விஞ்ஞான உலகம் சொல்கிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் யோகக் கலைக்கான பெருவிழா நடைபெறுகிறது. ஒருமுறை அந்த விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிட்டியிருந்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சுமார் பத்தாயிரம் பேருக்கு மேல் பெரியதொரு விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடினார்கள். சிறிது காலத்தின் பின்னர் ஐக்கியநாடுகள் சபை, உலக சுகாதார ஸ்தாபனம் யோகக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகமெல்லாம் காக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கினார்கள்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யோகக் கலை தொடர்பில் மிகவும் ஆர்வம் செலுத்தி இந்தியாவில் பாடசாலைகளில் காலை வேளையில் ஒரு சிறிய நேரமாயினும் யோகாசனம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தல் விடுத்தார். தற்போது இலங்கையிலும் பாடசாலைகளில் யோகப் பயிற்சி பற்றிய ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள்.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இந்த வருடம் உலக யோகா தினத்தை யாழ். இந்தியத் துணைத் தூதரகம் கொண்டாடியதுடன் எங்கள் இல்லத்தில் வாழ்கின்ற பிள்ளைகளுக்கு மிகப் பெறுமதியான பரிசில்களும் வழங்கினார்கள். அப்போது இந்தியாவில் இந்தியப் பிரதமர் யோகாசன விழாவை ஆரம்பித்து வைக்கின்ற தொலைக்காட்சி நிகழ்வையும் ஒளிபரப்புச் செய்தார்கள்.

முன்பொரு காலத்தில் ஆச்சிரமங்களிலும், ஆதீனங்களிலும், மடாதிபதிகளின் மாடாலயங்களிலுமிருந்த யோகக் கலை தற்போது உயிர்நாடியானதொரு கலையாக மாற்றம் பெற்று வருகிறது எனவும் அவர் மேலும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி :- செ. ரவிசாந்}

Related posts

உழவுஇயந்திரத்தை மோதித் தள்ளிய ரயில்!- தெல்லிப்பளையில் சம்பவம்

World News

யாழில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முண்டியடித்த பொதுமக்கள்!! (Photos)

TamilTwin

பாலமுனையில் பெரும் தொகை ஆயுதங்கள் மீட்பு! (Photos)

TamilTwin