Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்அரியாலையில் குடிநீரின்றி குடும்பங்கள் அவதி: பூமணி அம்மா அறக்கட்டளையால் குடிநீர் வசதி(Photos)

அரியாலையில் குடிநீரின்றி குடும்பங்கள் அவதி: பூமணி அம்மா அறக்கட்டளையால் குடிநீர் வசதி(Photos)

யாழ்.அரியாலையில் ஜே-96, 97 கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பல பகுதிகளையும் சேர்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் வசதி இன்றி நீண்ட காலமாகப் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் குடிநீர் பெறுவதற்காக குழாய்க்கிணறு வசதி ஏற்படுத்தித் தருமாறு பூமணி அம்மா அறக்கட்டளையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அமைய அரியாலை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு சொந்தமான சின்னாலங்கண்டு வீதியில் உள்ள காணியில் அறக்கட்டளையால் குழாய்க் கிணறு வசதி ஏற்படுத்திக் குடிநீர்த் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(30.9.2022) மாலை-03 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

அரியாலை கலைவாணி சனசமூக நிலையத் தலைவர் ஜெ.தருமராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இக் குடிநீர்த் திட்டத்தைப் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலியின் பிரான்ஸ், இலங்கைக்கான பணிப்பாளருமான யாழ்.தீவகம் வேலணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா வைபவ ரீதியாகத் திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் கையளித்தார்.

மேற்படி நிகழ்வில் கலைவாணி முன்பள்ளிச் சிறார்களுக்கான கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும், பெற்றோருக்கான கலை நிகழ்வுகளும் இறுதியாகப் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ. மயில்வாகனம், இணைப்பாளர் ரி.ஜோசேப், அரியாலை கலைவாணி சனசமூக நிலையத்தின் செயலாளர் த.பிரவீன், பொருளாளர் இ.சுந்தரகுமார் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கனடா ரொறன்ரோவைச் சேர்ந்த பூமணி அம்மா அறக்கட்டளையின் தீவிர செயற்பாட்டாளர் திரு.திருமதி மோகனதாஸ் சாந்தகுமாரி தம்பதியினரின் முப்பத்தியொராம் ஆண்டு திருமண நன்நாளை முன்னிட்டு அவர்களின் இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரம் ரூபா நிதிப் பங்களிப்பில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular