இலங்கை மக்கள் எதிர்நோக்கவுள்ள மற்றுமொரு பாரிய நெருக்கடி

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாள​ர் ஏக்கநாயக்க வீரசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுகர்வோரின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அண்மையில் அறிவித்திருந்தது.

கோவிட் தொற்று காலப்பகுதியில் வழங்கப்பட்ட கால அவகாசமே நீர் கட்டணக் கொடுப்பனவுகளின் போது நிலுவைத் தொகையாகவுள்ள 5.1 பில்லியன் ரூபாவை நுகர்வோரிடமிருந்து இன்னும் வசூலிக்கப்படாத நிலை, ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த நிலுவைத் தொகையில், உள்நாட்டு நுகர்வோர் சுமார் 3700 மில்லியன் ரூபாவும்,மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் 265 மில்லியன் ரூபாவையும் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 700 மில்லியன் ரூபாவை வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.