வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற செயலிகளை உபயோகிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

முக்கிய அல்லது ரகசிய ஆவணங்களை பகிர வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆவணங்கள் பகிர்வது மற்றும் கூட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சக அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதில், வாட்ஸ்ஆப், டெலிகிராம் நிறுவனங்களுக்கான சர்வர்கள் நாட்டுக்கு வெளியே இருக்கும் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால், பகிரப்படும் முக்கிய தகவல் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கியமான மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து நடைபெறும் கூட்டங்களின்போது ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.