Friday, February 3, 2023
Homeஆன்மிகம்பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இலங்கை இந்துக்கள் சார்பில் செஞ்சொற்செல்வரால் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைப்பு

பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு இலங்கை இந்துக்கள் சார்பில் செஞ்சொற்செல்வரால் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைப்பு

உலகம் முழுவதும் வாழக் கூடிய இந்துமக்கள் பெருமை கொள்ளக் கூடிய வகையில் ஓர் இந்து மகனாகிய தாங்கள் பிரித்தானியாவின் கெளரவப் பிரதமராகப் பதவி ஏற்றமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கை வாழ் இந்துமக்கள் சார்பில் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தங்களுக்குச் சமர்ப்பித்துக் கொள்ளுகிறோம் என அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவர் நேற்று வெள்ளிக்கிழமை(28.10.2022) ஆங்கில மொழியிலான வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தாங்கள் கோ பூசை செய்து பகவத் கீதையைச் சத்திய நூலாகக் கொண்டு பாரம்பரியத்துக்கு அமையப் பதவி ஏற்றமை குறித்து நாம் பூரிப்படைகிறோம்.

பாரத பூமியைப் பூர்வீகமாகக் கொண்ட தங்கள் குடும்பத்தவர்கள் இன்றுவரை இந்துப் பண்பாட்டுப் பாரம்பரியங்களைத் தழுவித் தங்களை வளர்த்தமையை இட்டு உங்கள் பெற்றோருக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக.

பிரித்தானிய தேசம் இலங்கையைக் கைப்பற்றித் தங்கள் சட்ட திட்டங்களை இங்கு நெறிப்படுத்தினார்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய போதிலும்
இதுவரை தமிழர்களுக்கு நீதியான உரிமைகள் வழங்கப்படவில்லை. இவ்விடயம் குறித்துச் சர்வதேச சமூகமே தற்போது நன்கறியும்.

பிரித்தானியப் பிரதமராகிய தாங்கள் தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து படும் துன்பங்களை நீக்குவதற்குத் தங்களால் இயன்றவரை உறுதுணை செய்ய வேண்டும் என இவ் வேளையில் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

தாங்கள் பிரித்தானிய நாட்டின் பிரதமராக விளங்கும் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பத்தில் இலங்கையில் உள்ள புராதன இந்துக் கோவில்களுக்குச் சமூகம் தந்து வழிபாடு செய்ய வேண்டும் என எமது அன்பான வேண்டுதலை முன்வைக்கிறோம்.

தங்களுக்கும் தங்கள் பாரியார், பிள்ளைகள், பெற்றோர் அனைவருக்கும் எமது அன்பையும், நல்லாசிகளையும் தெரிவித்துத் தங்கள் ஆட்சியில் நல்ல பல செயற்திட்டங்கள் சிறக்க இறைவனைப் பிரார்த்தித்து அமைகிறோம் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular