Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்திருக்கோணேஸ்வரர் திருப்பணிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும்: இந்தியப் பிரதமருக்கு செஞ்சொற்செல்வர் கடிதம்

திருக்கோணேஸ்வரர் திருப்பணிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும்: இந்தியப் பிரதமருக்கு செஞ்சொற்செல்வர் கடிதம்

இலங்கை வாழ் சைவமக்களின் பெருங் கோவில்களில் ஒன்றாக விளங்குகின்ற திருக்கேதீச்சரத்தை இந்திய அரசாங்கம் சுமார் முந்நூற்றி ஐம்பது மில்லியன் ரூபா செலவில் கருங்கற் கோவிலாக அமைத்துச் சிறப்பித்துள்ளமை நன்றிக்குரிய விடயமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் சரித்திரப் பிரசித்திபெற்ற திருக்கேதீச்சரத்தைப் புனரமைத்தது போல் சரித்திரப் பெருமை கொண்ட திருகோணமலை திருக்கோணேஸ்வரத்தையும் இந்திய அரசு பொறுப்பெடுத்து நன்முறையில் ஆலயத் திருப்பணிகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று புதன்கிழமை(29.6.2022) இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ள கோரிக்கைக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

09.3.2017 திருக்கீச்சர அறங்காவலர் சபை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய திருப்பணி வேலைகள் நடைபெற்றுச் சிறந்த முறையில் ஆலய அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடித்தம்ப மண்டபம் முற்றாக கருங்கல்லால் கட்டப்பட்டு ஜீலை மாதம் ஆறாம் திகதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் உலகம் முழுவதும் வாழும் சைவமக்களுக்குப் பெருமை தரும் விடயமாக உள்ளது.

இத் திருப்பணி வேலைகள் பெரிதும் அக்கறை கொண்ட கொழும்பு இந்தியத் தூதுவராலயத்தில் 2017 முதல் இன்றுவரை பணியாற்றிய தூதுவர்களுக்கும், ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது அதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உதவிய அன்றைய தூதுவர் அசோக்காந்துக்கும் சைவமக்கள் சார்பில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

வடக்கிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில் பணியாற்றிய உதவித் தூதுவர்கள் மகாலிங்கம், ஆ.நடராஜன், பாலச்சந்திரன் ஆகியோர் இப்பாரிய திருப்பணி திருப்பணி வேலைகளில் காட்டிய அக்கறையை மறக்க முடியாது.

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் திருப்பணி வேலைகளைச் செய்வதில் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டுத் தடுத்து வருவதைப் பலரும் அறிவர். திருக்கோணேஸ்வரர் ஆலயக் கோபுரத் திருப்பணி, அன்னதான மண்டபத் திருப்பணி, தேரோடும் அமைப்பு வீதி அமைப்பு யாவும் பல வருடங்களாகத் தடைப்பட்டுப் போயுள்ளது.

இந்நாட்டின் மீது படையெடுத்த போர்த்துக்கேயரால் 1510 இல் கோணேஸ்வரர் கோவில் முற்றாக அழிக்கப்பட்டது. இன்றுவரை அவ் ஆலயம் முழுமையாக கட்டி முடிக்கவில்லை.

இந்திய நாட்டுடன் மிக நெருங்கிய வரலாறு கொண்டது திருக்கோணமலை. இராமாயண காலத்து திருக்கோயில் என்பது யாவரும் அறிந்ததே. இந்தியப் பிரதமர் திருக்கோணேஸ்வர ஆலயத் திருப்பணியில் அக்கறை கொண்டு ஆலயத்தினைப் புனர்நிர்மாணம் செய்து உதவுமாறு இலங்கை வாழ் சைவமக்கள் சார்பில் மிகுந்த நன்றியோடு வேண்டுகின்றோம் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular