Friday, February 3, 2023
Homeஆன்மிகம்செஞ்சொற்செல்வரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

செஞ்சொற்செல்வரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

எங்கள் மண்ணில் ஏதோ ஒரு இடையூறு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தற்போது போதைவஸ்து என்ற அரக்கனின் ஆட்சி உக்கிரம் அடைந்துள்ளது. தீபாவளித் திருநாளில் அக் கொடூரச் சூழலிலிருந்து எம் சமூகம் காப்பாற்றப்பட வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம்
எனத் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்து மக்களால் உலகளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை (24.10.2022) கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்துமக்களின் இனிய விழாக்களில் தீபாவளிப் பண்டிகை முதன்மையானது. நீதி நிலைக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்காக முன்னோர் எடுத்த பெருவிழாவே தீபாவளித் திருநாள் விழாவாகும்.

கொடூரமான ஆட்சி செய்த நரகாசுரனை வதம் செய்து அறம் வெல்லும் என்ற உண்மையை இறைவன் ஞாபகம் ஊட்டிய நாளே இத் திருநாள். இத் திருநாளில் அனைவரும் திருக்கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதுடன் மூத்தோரை வணங்கி நல்லாசி பெற வேண்டும்.

பழைய கோபங்களை மறந்து எல்லோரும் இன்புற்று வாழ்வதற்காக இந் நாளைப் பயன்படுத்த வேண்டும். இருளில் இருந்து விடிவு பெற்ற நாளாகிய தீபத் திருநாளில் அகத்தில் நல்லவற்றை எண்ணி நலமே வாழ அனைவரும் திடசங்கற்பம் கொள்வோம்.

ஆடை மாற்ற வழியின்றி அவலப்படும் ஏழைகளுக்கு இரங்குவோம். எல்லோருக்கும் உணவு கிடைக்க இந் நாளில் பிரார்த்திப்போம். இலங்கையில் உண்மையான நீதி நிலைத்திட இமைப்பொழுதும் பிரார்த்திப்போம். அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்லாசிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து அமைகிறேன் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular