செஞ்சொற்செல்வரின் பிறந்தநாளில் இருவருக்கு இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது(Photos)

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல சைவத்தமிழ்ச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகனின் 61 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுக் கலாநிதி.ஆறு.திருமுருகனின் பிறந்தநாள் அறநிதியச் சபையின் ஏற்பாட்டில் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது வழங்கும் விழா இன்று சனிக்கிழமை (28.5.2022) காலை-9 மணிக்கு மேற்படி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

கலாநிதி.ஆறு.திருமுருகனின் பிறந்தநாள் அறநிதியச் சபைத் தலைவர் செஞ்சொற்செல்வர். கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் மலையகத்தைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியற்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.சின்னையா கருப்பையா நவரட்ணராஜா மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியரும், யாழ்.கோப்பாயைச் சேர்ந்தவருமான இராமச்சந்திரன் இரமணன் ஆகியோர் இந்த வருட ‘இளைய ஆற்றலாளர் விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.

குறித்த இருவரும் தமது வாழ்க்கைத் துணையருடனும், பிள்ளைகளுடனும் இணைந்து கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டனர்.

மேற்படி விழாவில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க.செந்தில்ராஜக் குருக்கள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரைகள் ஆற்றினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி பேராசிரியர் வைத்தியநிபுணர். இ.சுரேந்திரகுமாரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், துர்க்காதேவி ஆலயத் தர்மகர்த்தா சபைத் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், அமெரிக்காவின் கணக்காய்வு நிறுவனமொன்றின் கணக்காளரும், சமூக ஆர்வலருமான கிருஷ்ணபிள்ளை பாலசுப்பிரமணியம், தெல்லிப்பழை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.சங்கீதா கோகுலதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் நிகழ்த்தினர்.

இதேவேளை, மேற்படி விழா நிகழ்வில் பிறந்தநாள் விழா நாயகன் செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு.திருமுருகன் துறைசார் பெரியோர்களாலும், துர்க்காபுரம் மகளிர் இல்லச் சிறார்களாலும், ஆர்வலர்களாலும் பொன்னாடைகள், மலர்மாலைகள் அணிவித்தும், அன்பளிப்புக்கள் வழங்கியும் சிறப்பாக கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களும் அவருக்குக் குவிந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)