பருத்தித்துறை நகரசபையில் 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ்.பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பருத்தித்துறை நகரசபையில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை இடம் பெற்ற பருத்தித்துறை நகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீட்டு அமர்வில் கலந்து கொண்ட பருத்தித்துறை நகர சபை தவிசாளர், உறுப்பினர்கள், மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்கலாக 17 பேர் நேற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

நேற்றைய தினம்(25) பருத்தித்துறை நகரசபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு இடம் பெற்ற வேளை அங்கு கலந்து கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் அமர்வில் கலந்து கொண்ட 14 உறுப்பினர்களுடன் ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர், மற்றும் ஒரு எழுதுனர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.